கருத்துக்கள்

எழுத்தாளர் முஜிப் ரஹ்மான் (இந்தியா)

கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.

சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார், பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.

அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….

காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.

அவள் பெயர், ரிசானா நஃபீக்

Azaam Ameer

ஷரியாச் சட்டமும் 24ம் புலிகேசியும்.

அரிதாய் சில விடயங்கள் மனதைப் பதைத்துவிடும். பின் சிந்தையை மாற்றிக்கொள்ள கடும் பிரயத்தனம் வேண்டி நிற்கும். ரிசானாவை கொன்றுவிட்டார்கள் என்ற சேதியின் அதிர்வில் இருந்த என்னை, இடது கண் ஓரம் வழிந்தோடிய கண்ணீர் மீட்டுக்கொண்டு வந்தது. எவ்வளவு கெஞ்சல்களுக்கு பின்னும் இரங்காத காட்டரபிகளின் கல் நெஞ்சம், இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வளவு தூரம் என்பதை ஒளியாண்டுகளில் வெளிச்சம் காட்டியது.

சாமானியனான என்னால் பரிதாபப் படுவதைத் தவிர வேறென்ன முடியும் என்றிந்தவனை கடுப்பக்கினர் நம் உள்நாட்டு முப்திகள். இது இஸ்லாமிய அரசின் ஷரியாச் சட்டம், விமர்சித்தல் ஆகாது என வக்காளத்து வாங்கினர் பலர். இவ்வளவு தானா இஸ்லாம் என்று ஏக்கத்தைச் சொன்னனர் மாற்று மத நண்பர்கள். நம்மவர்களே தறுதலைகள் போல் இருக்கையில் மற்றவர்கள் எம்மாத்திரம். தெளிவுக்கை எனக்கு தெரிந்த விடயங்களை பகிரலாம் என நினைகிறேன்.

இப்பொழுது நாம் பார்க்கும் சவுதி, கடற்கொள்ளையர்கலான காட்டரபிகளின் ஒரு கூட்டம் இங்கிலாந்து மற்றும் சியோனிஸ்ட்களின் உதவியுடன் உலகம் போற்றிய உதுமானிய கிலாபத்தை தகர்த்து எறிந்துவிட்டு (1932ல்) உருவாக்கியதாகும். இப்படி அடிப்படையே பிழையாய் போன ஒரு அரசுக்கும் அதன் காட்டு மிராண்டி சட்டத்துக்கும் ஷரியா என்று சாயம் பூசி பூசை செய்யும் உள்ளுர் பூசாரிகளின், மன்னிக்கவும் மௌலவிகளின் அறிவை நினைத்தால் புல்லரிகிறது.

றிசானாவின் விசாரணையில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் ஒரு விடயம் மிக தெளிவாய் இருந்தது. எந்த குற்றத்தையும் நிருபிக்க சாட்சிகள் தேவை அல்லது குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இவழக்கில் சாட்சிகள் யாரும் இல்லை. தான் குற்றவாளி இல்லை; பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமும் தன்னை துன்புறுத்தி பெறப்பட்டது என்று தான் கைப்பட எழுதிய கடிதத்தில் மட்டும் இல்லை, தன்னை பார்க்க வந்த அனைவரிடமும் றிசானா கூறியுள்ளார். இதைவிட இவளின் விடுதலைக்கு வேறன்ன வேண்டும்?

சவூதி நீதிமன்றம் தப்பு செய்திருக்காது அது அரசின் தலையீடு இன்றி சுயாதீனமாக இயங்கும் நிறுவனம் என்றிருந்தால், இஸ்லாமிய அடிப்படையையே தகர்த்து எறியும் மன்னர் ஆட்ச்சிக்கு எதிராய் அது எப்போதோ தீர்ப்பு சொல்லி இருக்க வேண்டும். மன்னர் ஆட்சி நடத்தி நாட்டின் வளங்களையும் அதிகாரத்தையும் வரையறையின்றி கொள்ளையிட்டு அனுபவிக்கும் மன்னரையும் அவனின் அடிவருடிகளையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும். குறைந்தது கைகளையாவது வெட்டி கொடியில் காயப்போட்டிருக்க வேண்டும்.

புனித பள்ளிகள் இருக்கும் பூமியில் வெள்ளையர்களுக்கு என்று விஷேட வலயங்களை (Compounds ) அமைத்து அதற்குள் அரை குறை ஆடை, மதுபானம், போதை பொருள் மற்றும் என்ன என்னவோவெல்லாம் ஹலாலாக்கி, வெள்ளைக்காரனுக்கு கூசா தூக்கும் 24ம் புலிகேசி அப்துல் அசீசையும் அதற்க்கு ஆமா போட்டு ஆமோதித்த சவூதி முப்திககளையும் துக்கில் போட்டிருக்க வேண்டும். எங்கே போனது உங்கள் சவுதி ஷாரியாச் சட்டம். வெள்ளைக்காரன் ஆட சவுதிக்குள் இடம், சவுதிக்காரன் ஆட வெளிநாட்டில் இடம். நல்லா இருக்கையா உங்க டீலிங்கு.

போதா குறைக்கு நீதித் துறையில் சவூதி அரசு தலையிட முடியாது என்றும் காமடி அறிக்கைள் வேறு. 2001ம் ஆண்டில் பங்கரவாத குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் கனடிய பிரஜை வில்லியம் சாம்சன் பத்திரமாக வீடு திரும்பியதையும் ஓரின சேர்கையில் குற்றம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இன்னும் ஒரு பிரிட்டிஷ்காரன் புது மாப்பிள்ளை போல் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட வரலாறையும் சவுதியின் ஷாரியாச் சட்டம் சத்தம் இல்லாமலே செய்து முடித்தது.

ஒன்று மட்டும் அழுத்திச் சொல்லவேண்டும். நான் நம்பும் கடவுள் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புரையோன், எனது நபி கருணையின் முழு வடிவம், எனது சமயமும் அதன் சட்டங்களும் எப்போதும் அர்த்தபுஷ்டியானது. அழகிய என் மார்க்கத்தை சிலர் குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாய் விற்க்க விளைகையில் பொறுக்குதில்லை என் மனது. அநியனமாக கொல்லப்பட்ட என் சகோதரிக்காக பிராத்தனையும் அக்கிரம வஹாபிச சவூதி அரசின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டும் விமர்சனமும் என் இறுதி மூச்சுவரை தொடரும்.

எழுத்தாளர் என். சிஹாப்தீன்

சவூதி போன்ற – வஹ்ஹாபிய மன்னராட்சியில், இஸ்லாமிய சரியாவைப் பேணுகிறோம் என அவர்கள் காட்டிக் கொண்டிருப்பதைச் சரியாச் சட்டமென ஒருசாரார் வரிந்துகட்டிக் கொண்டிருக்க, இதுதான் சாட்டென்று இன்னொரு சாரார், சரியாச் சட்டம் காட்டுமிராண்டித் தனமானது எனவும் முதுகு சொரிய வெளிக்கிட்டிருக்கிறார்கள்..
சரியாச் சட்டம் சவூதியில் இருந்தால், ரிசானாவுக்கு முன்னரே நிறைய பௌத்த,இந்து , முஸ்லிம், கிறிஸ்தவப் பெண்கள் காலுடைந்து, கையுடைந்து,உடம்பெங்கும் ஆணிகளும்,குன்டூசிகளும் ஏற்றப்பட்டு, சீரழிக்கப்பட்டு இலங்கை வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களிடம், எங்கேடா உண்ட சரியா எனக் கேட்கவில்லை.
அமெரிக்க, பிரித்தானிய, இஸ்ரேலியக் கூட்டில் உருவாக்கப்பட்ட மன்னராட்சிகள் தங்களின் எஜமானர்களைப் போசிப்பதற்கு வேறு சட்டம். மக்களிடம் வாள் காட்டி அச்சுறுத்தல். அவர்களின் மடங்களில் கொடிகட்டிய அனாச்சாரம்.
‘எனது மகள் பாத்திமா ஆயினும், களவெடுத்தா ல் கைவேட்டுப்படும் என்பது சரியா.. ‘ இஸ்லாமிய சரியத்தைக் கொண்டுவருவேன்’ என்றதற்காக சொந்த சகோதரர், இளவரசர் பைசலையே கொலை செய்த சவூதின், வஹ்ஹாபிய சட்டங்கள் வேறு. இதன் கொம்புகள் நஜ்து தேசத்திலிருந்து வெளிவந்தவை. சவூதிய ஆசுபத்திரிகளில் தேங்கிக் கிடக்கும் ஆயிரம்தாண்டிய பிரேதங்கள் ஏழை பாழைகளினுடையது.
உங்கைன் அடிமைகளுக்கு, நீங்கள் உண்பதையே உண்ணக்கொடுங்கள். நல்லதையே உடுக்கக் கொடுங்கள். அநீதம் செய்து விடாதீர்கள் என அடிமைக்கே சரியா இப்படி இருக்க, அந்த வெயிலில் இப்படித்தான் முஸ்லிம் சரியா உள்ள நாடு நம்மக்களை வைத்திருக்குமா? எந்த சரியாவாவது, யூதர்கள் அல்ல, நாசிகள் தங்கள் நாட்டுத் தளங்களை ஈரானைத் தகர்த்தெறிய பாவிக்கலாம் எனச் சொல்லுமா? சதாம், கடாபி,பூட்டோ, சியாவுல்-ஹக், இன்றைய ஆசாத்துக் கெதிரான இலட்சக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொளிக்கும் அஜந்தாவுக்கு அவர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்ட, முஸ்லிம்களின் எட்டப்பர்கள் தான் இந்த மன்னர் ராஜ்ஜியங்கள்.

பதிவு:மனிதம் மட்டும்

வழிக்கின்றது நெஞ்சம் அழுகின்றது கண்கள் நபீஸாவுக்காக என்னை ஏழ்மையில் பிறக்கவைத்த சமூகம் குற்றவாளி இல்லை என்னை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் குற்றவாளி இல்லை சிறுமியாகிய என்னை வயது மாற்றி அனுப்பிய ஏஜண்டும் குற்றவாளி அல்ல தன் பிள்ளையை என்னை விட்டு பாலூட்ட சொன்ன தாயும் குற்றவாளி அல்ல என் கையில் மூச்சுவிட மறுத்த அந்த குழந்தையும் குற்றவாளி அல்ல எனது தரப்பை சொல்ல தடையாய் இருந்த நாடும் ,மொழியும் குற்றவாளி அல்ல விபத்துக்கும் மரணத்துக்கு வித்யாசம் தெரியாத மத சட்டமும் குற்றவாளி அல்ல என்னை மண்ணிக்காத அந்த பெற்றோர்ர்களும் குற்றவாளி அல்ல என்னை சாவிலிருந்து தடுக்காத இந்த உலகமும் குற்றவாளி அல்லை என் கொலையை நியாயபடுத்தும் இரக்கத்தின் காவலர்களும் குற்றவாளி அல்ல இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் குற்றவாளி அல்ல(ர்) ஆம்…………………….நான் தான் குற்றவாளி! ஏனென்றால் இந்த கொடுமையான சாவிற்கான தவறை இதுவரை யாரும் செய்த்தில்லை. என்னை கொலை செய்த்து அவர்கள் மட்டுமில்லை வேடிக்கை பார்த்த நீங்களும்தான் என் தலை உருண்ட இட்த்தில் நாளை உங்கள் மகள்,சகோதரி,தாய்,நன்பர்,மனைவி தலைகள் இருந்தாலும் வேடிக்கை மட்டும் பாருங்கள்! நபீஸா

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s